உள்நாட்டு பொறிமுறையில் எவ்வித நம்பிக்கையும் இல்லை, சர்வதேசம் தமது பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி போராடும் தம்மை திரும்பி பார்க்காமல் சர்வதேசம் கண்ணை மூடிக்கொண்டு உள்ளமை வேதனையை தருவதாகவும் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடாந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் தமக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தாலும், அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே இல்லாது போவதாக கவலை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இம்முறையாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
15 வருடங்களாக வீதியில் இறங்கி போராடி வரும் தமக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்றும் இதன் காரணமாகவே ஐ.நா சபையை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் குறிப்பிட்டடார்.
நீதிக்காக போராடிக்கொண்டு இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஓ.எம்.பி அலுவலகத்தை கொண்டுவந்து இழப்பீடு தருவதாக கூறப்பட்டுள்ளதே தவிர இதுவரை குறித்த அலுவலகத்தினால் எவ்வித பிரயோசனமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.