வடக்கு கிழக்கில் வலிந்து திணிக்கப்படும் மௌன யுத்தம் – வஞ்சிக்கப்பட்ட தமிழர்!

தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு, விகாரைகள் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதன் மூலம் வடக்கு கிழக்கில் மௌன யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

2009 வரை தமிழ் மக்களை வஞ்சித்துக் கொண்டிருந்த இலங்கை அரசு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு வடகிழக்கில் வித்தியதசமான ஒரு திணிப்பை முன்னெடுத்து வருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 33வது நினைவு அஞ்சலி  மட்டக்களப்பில் இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“தமிழர்களுடைய விடுதலைத் தாகம் இன்னும் தணியவில்லை என்பதை தென்னிலங்கை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்களுடைய தாகம், விடுதலை நோக்கம் இன்னும் தனியவில்லை என்பது இலங்கை வெளிநாட்டு அமைச்சருக்கு தெரிய வேண்டும்.

கோட்டாபயவின் விசுவாசியான வெளிநாட்டு அமைச்சர் ஒரே இரவில் தீர்வை கொடுக்கமுடியாது கிடைப்பதை பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

எனவே இனப்பிரச்சனை தோன்றி எத்தனை ஆண்டுகள் என அவருக்கு தெரியாமல் இருக்கலாம், ஒரே இரவில் இந்த பிரச்சனைக்கான தீர்வை நாங்கள் கேட்கவில்லை.

ஆகவே தற்போது வடகிழக்கில் நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் தமிழ் மக்களின் காணிகள் அபகரிப்பு தமிழர் பிரதேசங்கள் எங்கும் விகாரைகள் உயர்ந்த மலைகளில் விகாரை அமைப்பது சுற்றுலா பயணிகள் கூட இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை பறைசாற்றுவதற்காக இந்த திட்டங்களை செய்து வருகின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply