கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக A9 வீதியில் இடம்பெற்றது.
2383வது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவரும் உறவுகள் ஒவ்வொரு மாதமும் 30ம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், குறித்த போராட்டத்தில் பங்கேற்ற கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் இணைப்பாளர் கதிர்காமநாதன் கோகிலவாணி கருத்துத் தெரிவிக்கையில்,
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தற்போது கூட்டத்தொடர் இடம்பெற்று வரும் நிலையில் இந்த அமர்விலாவது எமக்கான நீதி கிடைக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கம் எந்த விதமான விசாரணைகளையும் முன்னெடுக்காத நிலைளில், சர்வதேசம் தான் இனி எமக்கான நீதியைப் பெற்றுத் தர வேண்டும்.
புலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் நாம் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
இவ்வாறான நிலையிலும் ஜெனிவாவும் சர்வதேசமும் எமக்கான நீதியை பெற்றுக்கொடுக்கும் நிலையில் இல்லை என்பதை சிந்திக்கும் போது கவலையாக உள்ளது.
சர்வதேசத்தை நம்பியே நாம் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். எமது உறவுகள் எங்கே என யாரிடமும் கேட்க முடியாத நிலையில் சர்வதேசத்திடம் தான் கேட்டு நிற்கின்றோம்.
சர்வதேசம் தான் எமக்கான நீதியைப்பெற்றுத் தரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாய் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபையை நம்பி இருக்கும் எமக்கு இது வரை எந்த உதவியும் கிடைக்கவில்லை.
ஐ.நா கூட இலங்கை அரசாங்கத்தின் பக்கமே சாய்துள்ளது. அங்கும் எமக்கான நீதி பெற்றுக்கொடுக்கொடுக்கப்படவில்லை.
கிளிநொச்சியில் அண்மையில் சிவஞானம் சிறீதரன் நடத்திய கூட்டத்தின் போது, ரணில் விக்ரமசிங்க பங்கேற்றிருந்த போது, உங்களுடைய பிள்ளைகள் 3 முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தான் பதவிக்கு வரும்பட்சத்தில் அவர்களை விடுவிப்பேன் எனத் தெரிவித்திருந்தார்.
அதன் போது அவரின் காலில் விழுந்து நான் மன்றாடினேன் எமது பிள்ளைகளை விடுவித்து தருமாறு.
ஆனாலும் இதுவரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை எனவு கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.