முல்லைத்தீவு மனித புதைகுழி விவகாரம் – பதிலளிக்க மறுக்கும் ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர்!

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கை சர்வதேச மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என தமிழ்த் தரப்பின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் இது தொடர்பில் நேரடியாகப் பதிலளிப்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் தவிர்த்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, “போர் இடம்பெற்ற பகுதிகளில் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும்” என நீதி அமைச்சர் அலட்சியமாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவு  கொக்குத்தொடுவாய் மத்தியில் இராணுவ சீருடைகள், பெண்களின் ஆடைகள் என்பவற்றுடன் மனித எச்சங்களும் கடந்த 29ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தன.

இது தொடர்பான மேலதிக அகழ்வுகள் எதிர்வரும் 6ஆம் திகதி நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக முன்னெடுக்கப்படவுள்ளன.

இவ்வாறான நிலையிலேயே இந்தப் புதைகுழி அகழ்வு சர்வதேச மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தரப்பால் வலியுறுத்தப்படுகின்றது.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த விடயத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.

இந்த விவகாரம் நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அடுத்தகட்டப் பணிகள் இடம்பெறும்.

இதைவிட மேலதிகமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பதிலளிக்கையில், போர் இடம்பெற்ற பகுதிகளில் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும்.

அவற்றைத் தோண்டும் போது சடலங்களும் ஆயுதங்களும் மீட்கப்படும். முல்லைத்தீவு புதைகுழியிலிருந்து போரில் ஈடுபட்ட ஒருதரப்பின் சீருடைகள் மீட்கப்பட்டதாக அறிந்தேன்.

நீதிமன்றம் அந்தப் புதைகுழியை அகழ்வதற்கான உத்தரவையும் விடுத்துள்ளது. அடுத்த கட்டச் செயற்பாடுகள் தொடர்பில் இப்போது எல்லாம் பதிலளிக்கமுடியாது.

அதேவேளை அந்தப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கும் என்னால் பதில் கூற முடியாது எனவும் அலட்சியமாக பதிலளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply