யாழ்ப்பாணம் தையிட்டிப் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரைக்கு எதிரான 3ஆம் கட்ட போராட்டத்தின் இரண்டாவது நாள் போராட்டம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
நேற்று போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், பலாலி பொலிஸார் பல்வேறு வகையில் அச்சுறுத்தலையும் இடர்களையும் ஏற்படுத்தியுள்ள நிலையிலும், இன்றும் இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்துள்ளது.
இன்று போயா தினம் என்பதால் விகாரையில் விசேட வழிபாடுகள் இடம்பெறும் நிலையில், போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக வழமையாக போராட்டம் நடத்தும் காணி உரிமையாளர் பலாலி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
விகாரைக்கு அருகிலுள்ள குறித்த தனியார் காணிக்குள் கடந்த 3 தடவைகளும் போராட்டம் முன்னெடுத்திருந்த நிலையிலேயே காணி உரிமையாளர் நேற்றுக் காலை விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
விசாரணையின் போது, எத்தனை தடவைகள் காணி வழங்கினீர்கள்? ஏன் காணி வழங்குகின்றீர்கள்? என அவரை உளவியல் ரீதியாக அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்துப் பொலிஸார் அந்தக் காணிக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசிக்க முடியாதவாறு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர் எனவும் செல்வராசா கஜேந்திரன் தெரவித்துள்ளார்.