நாட்டின் வங்கி கட்டமைப்பு முழுமையாக சரிவடையும் என பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் இலங்கையில் பணவீக்கம் 80 வீதமாக காணப்பட்டது. நாடு என்ற வகையில் அது மிகவும் கடினமாக நிலைமையாகும். அந்த நேரத்தில் ரூபாயின் பெறுமதியும் பெருமளவில் வீழ்ச்சி கண்டது.
மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான செலவினங்களின் அடிப்படையில் கட்டணங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.நெருக்கடி நிலையிலும் பணவீக்கத்தை அரசு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது.
அரசாங்கத்திடம் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே இருந்தன. அதனாலேயே நாடு வங்குரோத்து நிலைமை அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றிலிருந்து பெற்ற கடன்களை மறுசீரமைக்க முடியாது. காரணம், மிகக் குறைந்த வட்டியில் நீண்ட கால அடிப்படையில் அவை பெறப்பட்டுள்ளன.
அவர்களிடத்தில் பெறப்பட்ட கடன்களை எந்தவொரு தரப்பும் இதுவரையில் தள்ளுபடி செய்ததில்லை.
அவர்கள் கடன் தர மறுக்கும் பட்சத்தில், உலகில் வேறு எந்த தரப்பிடத்திலும் கடன் பெற முடியாது. மேலும், இந்தியா, ஜப்பான், சீனா மற்றும் பாரிஸ் சமவாயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகள் எமக்கு கடன் வழங்கியுள்ளன.
தற்போது, கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அவர்களுடன் வெற்றிகரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
மீண்டும் வங்குரோத்து நிலையை அடைந்துவிடாமல் உள்நாட்டு கடன்களையும் மறுசீரமைக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு, வங்கிகள், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி உள்ளிட்டவைகளின் பங்களிப்பை பெற வேண்டும். அத்தோடு 57 பில்லியன் வங்கி கணக்கு வைப்பாளர்களையும் நாம் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
இது கடன் மறுசீரமைப்பு முறையாகும். இதற்குள் அரசியல் செயற்பாடுகள் இல்லை. திறைசேரி, மத்திய வங்கி மற்றும் சர்வதேச நிதி ஆலோசகர்களின் பங்களிப்புடனேயே இதற்குரிய யோசனைகள் தயாரிக்கப்படுகின்றன.
நாட்டின் வங்கி கட்டமைப்பு முழுமையாக சரிவடையும் என பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.