வவுனியாவில் இராணுவ தலைமையகத்திற்கு முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பதற்றம்!

வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக குருணாகல் வரக்காபொல பகுதியில் வசித்து வரும் 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் மண்ணெண்ணை ஊற்றி தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்ய முயன்ற நிலையில் வவுனியா பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

குடும்பத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பிள்ளைகளையும் கணவன் அழைத்துச் சென்றுள்ள நிலையில், கணவனும் மனைவியும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே குறித்த பெண்ணுக்கும் வன்னி இராணுவ தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் குடும்பஸ்தரான இராணுவ வீரர் ஒருவருக்குமிடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சில வாரங்களாக இராணுவ வீரருடைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த குடும்ப பெண், அவரை தேடி வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு சென்ற போதிலும் இராணுவ வீரரை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை.

இதனையடுத்து அந்த பெண் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முற்பட்ட சமயத்தில் வவுனியா பொலிஸாரால் அவர் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் அவருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply