யாழில் முறியடிக்கப்பட்டது கடற்படைக்கான காணி சுவீகரிப்பு முயற்சி!

மண்டைதீவில் இலங்கை கடற்படையினருக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வெலிசுமன கடற்படை முகாமிற்கு காணி சுவீகரிக்கும் நோக்குடன் அளவீட்டுப் பணிகள் இடம்பெறவிருந்த நிலையிலேயே இன்று காலை எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, கடற்படை முகாம் அமைப்பதற்கான சுவீகரிப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய இன்று அளவீட்டுப் பணிகள் இடம்பெறும் என நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் குறித்த அளவீட்டுப் பணிக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் இன்று போராட்டம் இடம்பெற்ற நிலையில், அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள நில அளவைத் திணைக்களத்தினர் சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த எதிர்ப்புப் போராட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினர் அங்கு ஒன்று கூடியிருந்தனர்.

இவ்வாறான நிலையில், போராட்டம் இடம்பெற்ற இடத்தில் குளிர்பானம் மற்றும் சிற்றுண்டி என்பவற்றை கடற்படையினர் போராட்டக்காரர்களுக்கு வழங்க  முன்வந்த போதும், அவர்கள் அதனை நிராகரித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply