முல்லைத்தீவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி அகழ்வுக்கு பொறுப்பெடுக்குமாறும் அங்கு விஜயம் செய்து அதனை கையகப்படுத்துமாறும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் வொல்கர் துர்க்,( Mr. Volker Turk ) ஐக்கிய நாடுகளின் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு விசாரணை ஆணையாளர் அல்பான் அலென்கஸ்றோ (Mr. Juan Pablo Alban Alencastro) ஆகியோருக்கு தனித்தனியாக கடிதங்களை அனுப்பியுள்ளது.
அகழ்வுப்பணி தொடர்ந்தும் இடம்பெறும் பட்சத்தில் அதன் நடைமுறையையும், சர்வதேசக் குற்றங்களுக்கான ஆதாரத்தையும் நேர்மையாகப் பாதுகாக்கும் வகையில் அவசர கோரிக்கைகளாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
உலகளாவிய ரீதியிலுள்ள தமிழ் மக்கள், பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் அவர்களின் குடும்பங்கள் சார்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்குறித்த கோரிக்கையை உடனடியாகக் கோருவதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் செயற்குழு தமது அறிக்கையில் உலகிலேயே இலங்கையில் தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானது என குறிப்பிட்டிருந்தமையும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மேலும் பாரிய மனிதப் புதைகுழிகளை ஐக்கிய நாடுகளின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான ஆணையாளர் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறை உள்ளடங்கலாக இலங்கை அரச கட்டுமானங்களில் பரவலாக, வேரூன்றிய இனவாதம் காரணமாக தமிழ் மக்கள் ஒருபோதும் நீதியை உள்ளூர்ப் பொறிமுறை மூலம் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அந்தவகையில், உடனடியான அகழ்வுக்கான சர்வதேசப் பொறிமுறை ஒன்று, சாட்சியங்களைப் பாதுகாக்கவும், நீதியையும், பொறுப்புக்கூறலையும் நடைமுறைப்படுத்துவதற்கு அவசியம் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.