யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் 1990 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட 40 ஏக்கருக்கும் மேற்பட்ட பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மண்டைதீவில் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள தனியாரின் காணிகள் மிகவும் வளம் மிக்க தோட்டக்காணிகள் என்பதோடு, குடிநீருக்குப் பயன்படுத்தக்கூடிய நல்ல தண்ணீரைக்கொண்ட பகுதியாகவும் காணப்படுவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி குறித்த பகுதியிலேயே வேலணை, அல்லைப்பிட்டி மற்றும் மண்கும்பான் பகுதிகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் படையினரால் அழைத்து வரப்பட்டு சூட்டுப் படுகொலை செய்யப்பட்டு, செம்பாட்டு தரையில் புதைக்கப்பட்டும், கத்தோலிக்க தேவாலயத்திற்கு முன்னால் உள்ள கிணற்றில் வீசப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, குறித்த பகுதியை படையினர் ஆக்கிரமிக்கும் போது அங்கே வசித்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்கள் இதே இடங்களில் ஆங்காங்கே புதைக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாகவே குறித்த பிரதேசத்தை விட்டு படையினர் வெளியேற மறுப்புத் தெரிவித்து தொடர்ந்தும் தமிழரின் காணிகளை ஆக்கிரமித்து வைத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர்கள் வெளியேறினால் குறித்த பகுதியில் அகழ்வாராச்சிகள் இடம்பெறும். அதன் மூலம் படையினரின் படுகொலைகள் வெளிப்படுத்தப்பட்டுவிடும் என்ற நோக்கிலேயே வெளியேற மறுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.