குருந்தூர்மலையில் தமிழர்கள் சண்டித்தனம்காட்ட அனுமதிக்க முடியாது!

குருந்தூர்மலை தமிழர்களுக்குச் சொந்தமானது அல்ல. பௌத்தர்கள் வழிபடும் தலத்தில் பொங்கல் விழா என்ற பெயரில் தமிழர்கள் வந்து சண்டித்தனம்காட்ட அனுமதிக்க முடியாது என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாகத்தான் அங்கு சென்ற தமிழர்களை பொலிஸார் திருப்பியனுப்பியிருக்கக்கூடும் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி குருந்தூர்மலைக்கு வழிபடச் சென்ற தமிழ் மக்களுக்கு, பிக்குகள், சிங்கள மக்கள் மற்றும் பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டமை குறித்து சம்பவ இடத்தில் நேரடியாக இருந்த செய்தியாளர்கள் அறிக்கையிட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

குருந்தூர்மலைக்கு பௌத்தர்கள் வழிபடத்தான் சென்றிருந்தார்கள். அவர்கள் வன்முறையைத் தூண்டச் செல்லவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

குருந்தூர்மலையில் பிரிவினைவாதிகளான தமிழ் சட்டத்தரணிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழர்களைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க முயன்றனர். அவர்களின் கனவும் தவிடுபொடியாகிவிட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் பொலிஸார் மீதும் குருந்தூர் மலை பிக்கு மீதும் வழிபடச் சென்ற பௌத்தர்கள் மீதும் குற்றம்சாட்டுவது ஏற்கக்கூடியது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

வடக்கிலும் தெற்கிலும் உள்ள சில ஊடகங்கள் ஒரு தரப்பின் கருத்துக்களை மட்டும் செவிசாய்த்துக்கொண்டு செய்திகளை வெளியிடுகின்றன.

அந்த ஊடகங்கள் இரு தரப்பினரது கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும். அதேபோல் செய்தியாளர்களும் உண்மையை வெளியுலகுக்குப் படம் பிடித்துக்காட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply