முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில், வனவளத் திணைக்களத்தினரது அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நான்கு பேர் இன்று உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதிக்குச் சென்ற வனவள திணைக்கள அதிகாரிகள் அங்கு மக்கள் வசித்து வந்த தற்காலிக கொட்டில்களை அகற்றி தீயிடுவதற்காக மண்ணெண்ணையுடன் சென்றிருந்தனர்.
பெண்கள் தனிமையில் இருந்த கொட்டில்களுக்குச் சென்று முன்னாள் போராளியான பெண் ஒருவர் மீதும் ஆண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் மக்கள் தெரிவித்திருந்தனர்.
குறித்த சம்பவத்தின் பின்னணியிலேயே தமது நிலத்தில் 20 குடும்பங்களையும் விரைவில் குடியேற்றுமாறு கோரி குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பரந்தன் கைவேலிப் பகுதியில் வீதி ஓரமாக தகர கொட்டகை அமைத்து, ரவிச்சந்திரன் உதயச்சந்திரன், யோகேஸ்வரன் மயூரன், கணபதி கதிர்க்கீரன், கோவிந்தன் பிரசாந்தன் ஆகிய நால்வரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாங்கள் வாழ்ந்த இடத்தில் தங்களை மீளக் குடியேற்றுமாறு கோரிக்கை முன்வைத்து இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கைவேலி பகுதியில் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் 45 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு, 45 குடும்பங்கள் குடியேறி இருந்தனர்.
இந்நிலையில், யுத்தம் காரணமாக குறித்த பகுதியில் வழந்த மக்கள் இடம்பெயர்ந்து சென்றிருந்தனர்.
அதனையடுத்து, 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், குறித்த கிராம மக்கள் 2012 ஆம் ஆண்டு கைவேலி பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது அப்பகுதியில் வாழ்ந்த குடும்பங்கள் மீள்குடியேற்றவில்லை.
யுத்தத்தின் போது பலர் உயிரிழந்தும், ஏனையவர்கள் வேறு இடங்களில் குடியேறியும் உள்ளனர்.
இவ்வாறான நிலையில் குறித்த பகுதியை வனவள திணைக்களம் எல்லைக் கற்கள் இட்டு வனப்பகுதியாக்கி விட்டனர்.
இந்நிலையிலேயே தற்போது, கைவேலி பகுதியில் காணிகள் வீடுகள் அற்ற சுமார் 20 குடும்பங்கள் பலகாலமாக குடியேறி வாழ்ந்து வரும் நிலையிலேயே வனவளத் திணைக்களம் அங்கு குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்து உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.