கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும், சர்வதேச நிபுணத்துவ கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண கதவடைப்பிற்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
எனினும் கதவடைப்புப் போராட்டம் தொடர்பாக வவுனியா மாவட்டத்திலுள்ள வர்த்தக சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் மாவட்ட சிகை அலங்கார சங்கம் ஆகியவற்றிற்கு கதவடைப்புத் தொடர்பாக இதுவரை எவரும் கோரிக்கை விடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த வவுனியா வர்த்தக சங்கத்தினர், தமக்கு கோரிக்கை எவையும் கிடைக்கப்பெறாமையினால் எவ்வித தீர்மானமும் தாங்கள் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தனர்.
இதேவேளை, வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவிக்கையில், தமது பேருந்துகள் நாளை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்படாது என்பதுடன் ஏனைய பகுதிகளுக்கான சேவைகள் பேருந்து உரிமையாளர்களின் தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்தனர்.
மேலும், மாவட்டத்திலுள்ள ஏனைய சங்கங்களின் நிலைப்பாடே தமது நிலைப்பாடக அமையும் எனவும், இதுவரை எவ்வித முடிவுகளும் மேற்கொள்ளப்படவில்லை என முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட சிகை அலங்கார சங்கத்தினருக்கும் இது தொடர்பில் எவ்வித கூட்டங்களும் இடம்பெறவில்லை என்பதுடன் தமது நிலைப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.