செம்மணி முதல் கொக்குத்தொடுவாய் வரை நீளும் புதைகுழிகளுக்கான நீதி எங்கே?

தமிழினத்தின் மீது இனவழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள பேரினவாதம், மனித புதைகுழிகளையே தமிழ் மக்களுக்கு பரிசாக கொடுத்துள்ளது என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது..

செம்மணியில் ஆரம்பித்த மனித புதைகுழி இன்று கொக்குத்தொடுவாய் வரை நீண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும், சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தமிழர்கள் மீது இன்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இக்கட்டமைக்கப்பட்ட இனவழிப்பில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்க தற்போதைய பூகோள பொருளாதார அரசியல் சூழ்நிலையில் தென்னாசியாவின் உணர் புள்ளியில் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க முற்படும் சர்வதேச சக்திகள் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

  1. தமிழின அழிப்பை மேற்கொண்ட, எமது உறவுகளை காணாமல் ஆக்கிய சிங்கள இராணுவம் தமிழர் தாயகம் எங்கும் நிலைகொண்டுள்ளது. இந்த இராணுவம் தமிழர் தாயகத்தில் 1983 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட அளவிற்கு குறைக்கப்பட்டு முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும். அவர்கள் வலிந்து பறித்த தமிழர் நிலங்கள் மீள கையளிக்கப்பட வேண்டும்.
  2. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு சர்வதேச நீதி வழங்கப்பட வேண்டும்.
  3. சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
  4. காலங்காலமாக நடைபெற்று வரும் தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதி பொறிமுறை (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் / ICC, சர்வதேச நீதிமன்றம் ICJ ) ஊடாக நீதி வழங்கப் படவேண்டும்.
  5. அரச இயந்திரங்களான தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் , வனப் பாதுகாப்பு திணைக்களம், நிலவள திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக பௌத்த மயமாக்கல், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை சிறிலங்கா அரசாங்கமானது முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகிறது. வட-கிழக்கில் உள்ள சுமார் 200 இற்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த தமிழ் ஆலயங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. அத்துடன் தமிழர் தாயகம் எங்கிலும் பெளத்த விகாரைகள் அமைக்கப்பட்டும், அமைக்கப்படுவதிற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றது. இவ்வாறான நில அபகரிப்புகளும், பெளத்த சிங்கள மயமாக்கல்களும் உடனடியாக நிறுத்தப்பட்டு காணிகள் மீள கையளிக்கப்பட வேண்டும்.
  6. மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதும், இன அடக்குமுறைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களின் உறவுகள், மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது அவர்களின் பேச்சுரிமை, நடமாடும் சுதந்திரம் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும். அத்துடன் தமிழர் தரப்பில் உருவாகும் விடுதலைக்கான தன்னெழுச்சியான அரசியல் வெளியினை ஒடுக்குவதில் சிங்கள பெளத்த பேரினவாத அரசு குறியாகவே உள்ளது. இவ்வாறான அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

மேற்குறித்த உடனடி, அவசரமான பிரச்சனைகள் தீர்க்கப்படுமிடத்தேதான், அரசியல் தீர்வை நோக்கி நகர கூடிய புற சூழ்நிலை உருவாகும்.

தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கான எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும், சர்வதேசத்தினால் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணையைப் பெற வேண்டும். இதில் நம்மை நாமே ஆளக்கூடிய தீர்வுகளே தெரிவுகளாக உள்ளடக்கப்பட வேண்டும் என்பதையும் இவ் அறிக்கை மூலம் வெளிப்படுத்தி நிற்கின்றோம்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply