அவுஸ்திரேலியாவில் இராணுவ கெலிஹொப்டர் ஒன்று பயிற்சியின் போது வடகிழக்கு கடற்கரை பகுதி தண்ணீரில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 இராணுவ வீரர்கள் காணாமல் போய் இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
குயின்ஸ்லாந்தின் ஹாமில்டன் தீவுக்கு அருகில் உள்ள துணை வெப்பமண்டல கடல் நீரில் அவுஸ்திரேலிய இராணுவத்தின் MRH-90 தைப்பான் ரக கெலிஹொப்டர் நேற்று இரவு விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் இந்த விபத்தை தொடர்ந்து, கெலிஹொப்டரில் இருந்த அவுஸ்திரேலியாவின் 4 விமானப்படை வீரர்கள் காணாமல் போய் இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ்(Richard Marles) தெரிவித்துள்ளார்.
12 மணி நேர தேடுதலிற்கு பிறகும் அவர்கள் குறித்த தகவல் தெரியவில்லை, இருப்பினும் தேடுதல் பணியானது இன்றும் தொடரும் என்று மார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் காணாமல் போன வீரர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான ஆதரவை சிறப்பு அதிகாரிகள் வழங்கி வருகின்றனர் என்பதோடு, இன்னும் சில மணி நேரங்களில் காணாமல்போனோர் தொடர்பில் தகவல் கிடைக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஜப்பான், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் பங்கேற்ற தாலிஸ்மேன் சேபர் இராணுவ பயிற்சியை நிறுத்தி வைப்பதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
போர் பயிற்சியானது இரண்டாவது வாரத்தில் நுழைந்து இருந்த நிலையில், போர் பயிற்சியின் போது பெரிய அளவிலான தந்திரோபாயங்கள், தரைவழி தாக்குதல், நீர்நிலை தரையிறக்கம் மற்றும் விமான செயல்பாடுகள் போன்றவற்றை ஆராய திட்டமிடப்பட்டு இருந்தது.