அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில், தியாக தீபம் திலீபனின் நினைவு நாளை குழப்புவதற்கு அரசாங்கத்தின் கைக்கூலி டக்ளஸ் மற்றும் அரச அதிபரும் அபிவிருத்தி குழு கூட்டம் நடத்துகின்றனர் என தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அமெரிக்கா சென்ற ஜனாதிபதி அனைத்து நினைவேந்தல்களிற்கும் அனுமதி வழங்கியுள்ளதாகவும், எந்த தடையும் இல்லை எனவும் கூறியுள்ளார் என்பதையும் அதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறே சரத் வீரசேகரவும் கூறினார் எனவும் ஆனாலும், தாங்கள் நினைவேந்தல்களை மேற்கொள்ள பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இவ்வாறு கூறினாலும், எத்தனை கண்காணிப்புக்கள் இங்கு உள்ளன. தமது உரைகளை அவர்கள் ஒலிப்பதிவு செய்வதோடு, தம்மை சுற்றி கண்காணிப்பிலும்,விபரங்களை திரட்டியும் வருகின்றனர் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, அரசாங்கத்தின் கைக்கூலியான டக்ளசும், அரச அதிபரும் சேர்ந்து இந்த நினைவேந்தலை குழப்புவதற்காக அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்துகின்றனர் என விமர்சனம் வெளியிட்டுள்ளார்.