இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையின் சுயாதீனம் மீது அரச வன்முறை – சர்வதேச நீதியே எமது பரிந்துரை எனும் தொனிப் பொருளில் இன்று காலை கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் இடம்பெறும் இனரீதியான ஒடுக்குமுறைகளுக்கு சர்வதேச நீதி கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது “நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கடிகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜாவிற்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்க வேண்டும், நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டிருந்தன.
அதேவேளை, “நீதியின் கழுத்தில் தூக்குக் கயிறு நீரத்துப் போனதா நியாயத்தின் உணர்வு”, “உலகே உனக்கு கண் இல்லையா தமிழ் ஈழப் படுகொலைகள் நினைவில்லையா”, “அடம் பிடிக்காதே ஐ.நாவே ஈழத் தமிழருக்கு ஆறுதல் அளித்திடு ஐ.நாவே”, “வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.