விசாரணைகளுக்காக தோண்டியெடுக்கப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலை மீண்டும் அடக்கம் செய்ய, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
அதன்படி, கொழும்பு – ஜாவத்தை மயானத்தில் தினேஷ் ஷாப்டரின் மனைவியினால் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் அவரது உடலை அடக்கம் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று உத்தரவிட்டுள்ளார்.
தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்வது பொருத்தமற்றது என அவரது மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்தநிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 31ஆம் திகதி ஒத்திவைத்து நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஐவரடங்கிய மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கை, அன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் கொழும்பு நீதவான் ரஜீந்திர ஜயசூரிய அறிவித்துள்ளார்.