புதிய தேர்தல் முறைமை ஒன்று கொண்டு வரப்படும் என்று கூறி ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளன.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு புதிய தேர்தல் முறை கொண்டுவரப்படும் என்று கூறி ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒத்திவைக்க முயற்சித்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, உத்தர லங்கா சஹாபய, சுதந்திர மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் மற்றும் குழுக்கள் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலை அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துக்கு முன்னரும், பொதுத் தேர்தலை 2025 ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,
திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்படாவிட்டால், வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்கும் வகையில் சட்டத்தின் ஊடாக செயற்பட குறித்த கட்சிகளும் குழுக்களும் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
இறுதி முயற்சியாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கவும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கவும் அரசாங்கத் முயற்சிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு புதிய தேர்தல் முறைமை கொண்டுவரப்படும் என கூறுவதன் மூலம் அரசாங்கம் உண்மையில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கவோ அல்லது புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தவோ முயற்சிக்கவில்லை என்றும் மாறாக ஒத்திவைப்பதற்கு தேவையான பின்னணியை உருவாக்கவே முயற்சிக்கின்றது என்றும் எதிர்கட்சிகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் தன்னிச்சையாக தேர்தலை பிற்போட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.