கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்ட இரகசிய ஆவணம் – அம்பலப்படுத்திய மைத்திரி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“இரண்டு நாட்களுக்கு முன்னர், பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆலோசகர் பேராசிரியர் ரோஹான் குணரத்ன, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் விசாரணைக் குழுக்களுக்கு வெளிப்படுத்த முடியாத, மிகவும் இரகசியமான அறிக்கைகள் தங்களிடம் உள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அறிக்கைகளை எந்தக் காரணம் கொண்டும் வெளியிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நான் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிக்கையை கையளிக்கும்போது, தனியான ஒரு ஆவணத்தை, கையளித்தனர்.

இந்த ஆவணத்தை சட்டமா அதிபருக்கோ, புலனாய்வுப் பிரிவினருக்கோ, சி.ஐ.டியினருக்கோ, பொலிஸாருக்கோ வழங்காமல், தனிப்பட்ட ரீதியாக வைத்துக் கொள்ளுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரோஹான் குணரத்ன இரகசியமான அறிக்கைகள் தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான ஆவணம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளும் தவறானவை என்பதோடு, அநீதியானவை என்பதை இங்கே நான் கூறிக்கொள்கிறேன்.

சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பாக, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாட்டில்தான் நானும் உள்ளேன்.

இந்த நாடாளுமன்றில் இதற்கு முன்னரும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

இதில், எனக்கு எதிரானவர்கள் மட்டும்தான் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

வன்மத்துடன், பழி வாங்கும் நோக்கத்துடன் தான் இந்த தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply