தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றின் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே வீ.ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடாந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அமரர்களான தந்தை செல்வா, அமிர், சிவசிதம்பரம் ஆகியோரால் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சிதைத்து 2004ஆம் ஆண்டு கூட்டணியில் வளர்க்கப்பட்ட சம்பந்தன் வளர்த்த கடாவாக மட்டுமல்ல ஓநாயாகவும் மாறி வரலாற்றுத் துரோகம் செய்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்குச் செய்த துரோகம் தற்போது சம்பந்தனுக்குத் திரும்பி விட்டது.
ஆகையால் சம்பந்தன் மட்டுமல்ல 2004ஆம் ஆண்டு துரோகத்தனத்தால் தமிழர்களின் வாக்குகளைக் கொள்ளையடித்து நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாகத் தமது பதவிகளை இராஜிநாமா செய்ய வேண்டும்.
இதுவே காலத்தின் கட்டாயமும் தேவையுமாகும். அதுமட்டுமல்ல அழிந்துபோன தமிழர்களின் ஜனநாயக மரபைக் கட்டிக்காப்பதற்கும் தமிழ் மக்களின் உண்மையான அபிலாஷைகளை மீண்டும் நம்பிக்கையோடு கட்டியெழுப்பவதற்கும் இவர்கள் அனைவரும் இராஜிநாமா செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார்.