காங்கேசன்துறை தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், தையிட்டி வாழ் மக்களும் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதற்கமைய இன்றைய தினமும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை குறித்த போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் முகமாக போராட்ட களத்துக்கு சென்ற தென்னிலங்கையைச் சேர்ந்த காணி உரிமைக்கான மக்கள் அமைப்பை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் விகாரைக்குள் சென்று விகாரைக்குப் பொறுப்பான பௌத்த பிக்குவை சந்தித்தனர்.
அதன் போது குறித்த குழுவினரால் சிங்கள மக்கள் வாழாத பகுதியில் எதற்கு விகாரை? தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணியில் ஏன் அமைத்தீர்கள் என கேட்கப்பட்ட போது பிக்கு எழுந்து சென்று விட்டதாக தென்னிலங்கை குழுவினர் வெளியே வந்து கருத்து தெரிவித்தனர்.
பின் போராட்ட களத்துக்கு சென்று தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்துக்கு தமது தார்மீக ஆதரவைத் தெரிவித்தனர்.
இதேவேளை, அருகிலுள்ள ஆலயமொன்றில் பொங்கல் வழிபாடுகளை மேற்கொண்டு ஒலிபெருக்கியை பாவிக்க முனைந்த போது பொலிசார் தடுத்து நிறுத்தினர்.
பின் விகாரையில் மட்டும் எவ்வாறு ஒலிபெருக்கி பாவிக்க முடியும் என கேள்வி எழுப்பப்பட்ட போது அதனையும் சென்று நிறுத்தினர்.
ஒவ்வொரு போயா தினங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்றும் தொடர்ந்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.