செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களது முயற்சியால் கீரிமலை, மாவிட்டபுரம், காங்கேசன்துறையின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம் நாளை (02) காலை 8.30 மணிக்கு திறப்புவிழாக் காண்கின்றது.
வைத்திய கலாநிதி கமலாகரன் என்பவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிலத்தில், சிவபூமி அறக்கட்டளை சார்பில் யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் கீரிமலை வீதி பகுதியில் சிவபூமி திருக்குறள் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு 1,330 திருக்குறள்களும் கருங்கல்லில் கைகளால் செதுக்கப்பட்டுள்ளதோடு, திருக்குறள் தொடர்பான ஆய்வுகளை மாணவர்கள் செய்வதற்கு வசதியாக மாடிக்கட்டடம், ஆய்வாளர்கள் தங்கும் வசதிகள், நூல் நிலையம், தியான மண்டபம் என்பனவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அறக்கட்டளையின் வெள்ளி விழா ஆண்டையொட்டி சிவபூமி திருக்குறள் வளாகத்தின் திறப்பு விழா நாளை காலை 8.30 மணி முதல் நடைபெறவுள்ளது.
நிகழ்வின் தலைவராக செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் விளங்க, அறக்கட்டளையின் இணைச் செயலர் மகேசன் தயாகரன் இந்த நிகழ்வில் வரவேற்புரை வழங்கவுள்ளதோடு, ச.இரத்தின சபாபதி குருக்கள், ரிஷி தொண்டு நாதன் சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கவுள்ளனர்.
தொடர்ந்து, காலை 9.05 மணிக்கு திருக்குறள் வளாகம், திருவள்ளுவர் உருவச் சிலை, திருக்குறள் ஆராய்ச்சி நூல் நிலையம், தியான நிலையம் ஆகியவை திறக்கப்படவுள்ளன. இதையடுத்து நினைவுக்கல் திரை நீக்கம் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
விழாவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா, கிழக்கு இலங்கை பல்கலைக்கழகத் துணைவேந்தர் வ.கனகசிங்கம், வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் அ.அற்புதராஜா, யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் அ.சண்முகதாஸ், வலி வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர் சிவகெங்கா சுதீஸ்னர் ஆகியோர் வாழ்த்திப் பேசவுள்ளனர்.
உச்சநீதிமன்ற நீதிபதி பங்கேற்பு… தொடர்ந்து, முதன்மை விருந்தினராகப் பங்கேற்கவுள்ள இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ர. மகாதேவன், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கவுள்ள யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி, சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
இதையடுத்து சிவபூமி சிறப்பு மலரை சிவபூமி மலர் ஆசிரியர் ச.சந்தோஷன் வெளியிடவுள்ளார். மனோன்மணி சண்முகதாஸ் திருக்குறள் உரை நூலை அறிமுகப்படுத்தவுள்ளார். நிறைவாக, சிவபூமி அறக்கட்டளையின் இணைச் செயலர் பு.ஸ்ரீ விக்னேஸ்வரன் நன்றியுரையாற்றவுள்ளார்.
விழாவையொட்டி, ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து’ என்ற தலைப்பில் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா தலைமையில் கவியரங்கம், ‘திருக்குறளின் மேன்மையை பெரிதும் வெளிப்படுத்துவது அறத்திலே… இன்பத்திலே…’ என்ற தலைப்பில் பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி தலைமையில் பட்டிமன்றம், சிறப்பு இசை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.