நாடாளுமன்றத்தை மீறிச் செயற்படும் சட்டக்கல்லூரி முதல்வர்; எம்.பி.க்கள் போர்க்கொடி!

மாணவர்களை அவரவர் தாய்மொழியில் பரீட்சை எழுத அனுமதிப்பது தொடர்பாக நாடாளுமன்றம் எடுத்த தீர்மானத்தை மீறிச் செயற்பட்ட சட்டக்கல்லூரி அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை மீறிய சட்டக் கல்லூரி அதிபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆங்கிலத்தில் சட்டப் பரீட்சைகளை நடத்துவதற்கான ஒழுங்குமுறை விதிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மார்ச் 21, 2023 அன்று நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சட்டக் கல்லூரியில் பரீட்சைகளை ஆங்கிலத்தில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

அடுத்த பரீட்சை ஏப்ரல் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் சட்டக்கல்லூரி அதிபர் சிங்களம் மற்றும் தமிழில் சட்டப் பரீட்சைகளை நடத்துவதற்கு எதிராகப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நடவடிக்கையானது சட்டத்திற்கு எதிரானது என தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை மீறி சட்டக்கல்லூரி அதிபர் செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தெரிவித்துள்ளார்.

சட்டக்கல்லூரியின் அதிபரை சலுகைகள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான குழுவின் முன் அழைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முன்மொழிந்துள்ளார்.

சட்டக் கல்லூரித் தேர்வுகளை ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதற்கு ஆளும் கட்சி மற்றும் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply