தென்னாபிரிக்காவில் பத்து வயதிற்குட்பட்ட பாடசாலைக் குழந்தைகளில் பத்துப் பேரில் எட்டுப் பேர் எழுத முடியாமல் தவிப்பதாகச் சர்வதேச ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
சர்வதேச வாசிப்பு எழுத்தறிவு ஆய்வுக் குழுவினால் கடந்த 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் 400,000 மாணவர்களின் விபரங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 57 நாடுகளில் தென்னாபிரிக்கா கடைசி இடத்தைப் பிடித்தது.
தென்னாபிரிக்கக் குழந்தைகளிடையே கல்வியறிவின்மை 2016 இல் 78% ஆக இருந்து 2021 இல் 81% ஆக உயர்ந்துள்ளது.
கொவிட் -19 தொற்றின்போது பாடசாலைகள் மூடப்பட்டதாலேயே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தென்னாபிரிக்க நாட்டின் கல்வி அமைச்சர் அன்ஜு மொற்சிகா (Angie Motshekga) குறிப்பிட்டுள்ளார்.
வறுமை, சமத்துவமின்மை மற்றும் போதிய உட்கட்டமைப்பு வசதிகளின்மை போன்றவை நாட்டின் கல்வி வளர்ச்சியில் சவால்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தென்னாபிரிக்காவின் பெரும்பாலான பாடசாலைகள், வாய்வழி செயல்திறனில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.
தென்னாபிரிக்க குழந்தைகளில் 81% மானோர் அந்த நாட்டின் 11 அதிகாரபூர்வ மொழிகளில் எதையும் புரிந்துகொள்ள முடியாத நிலையிலிருப்பதாகக் குறித்த ஆய்வு சுட்டிக்காட்டுகின்றமையும் கவனிக்கத்தக்கது.
T01