அறிக்கையை நிராகரித்த சிறிலங்கா அரசு! கனடா பிரதமருக்கு தொடரும் எதிர்ப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையை  நிராகரிப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒரு தேசத்தின் தலைவரின் இத்தகைய பொறுப்பற்ற மற்றும் தூண்டுதலான அறிவிப்புகள் கனடாவிலும் இலங்கையிலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக ஒற்றுமையையும் வெறுப்பையும் வளர்க்கிறது என அமைச்சு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா மற்றும் அதன் தலைவர்கள் தவறான தகவல் மற்றும் தீவிரவாத கருத்துக்களை ஊக்குவிக்கும் வகையில் கனடாவில் இருந்து அறிவிப்புகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும், திரிபுபடுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் இலங்கை மீதான உதவியற்ற கவனத்தை நிறுத்துமாறும் இலங்கை வலியுறுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறிலங்காவுக்கான கனடா தூதுவர் எரிக்வோல்சினை வெளிவிவகார அமைச்சிற்கு அழைத்து கனடா பிரதமரின் கருத்திற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நேற்று தூதுவரை அழைத்து எங்களின் கண்டனங்களை தெரிவித்தோம், என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் 14 வருடங்களுக்குப் பின்னர் துன்பகரமான விதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைகூருகின்றோம். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையில் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் இழக்கப்பட்டன, பலர் காணாமல் போனார்கள், காயமடைந்தார்கள், இடம்பெயர்ந்தார்கள்.

கொல்லப்பட்டவர்கள், உயிர்பிழைத்தவர்கள் மற்றும் அர்த்தமற்ற வன்முறையால் ஏற்பட்ட துயரத்துடன் தொடர்ந்தும் வாழும் அவர்களின் குடும்பத்தவர்கள் குறித்து எங்கள் சிந்தனைகள் உள்ளன.

உயிர்பிழைத்தவர்களின் உரிமைக்காகவும் இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளவர்களுக்காகவும்  குரல்கொடுப்பதை கனடா நிறுத்தாது, என கனடா பிரதமர் கடந்த 18 ஆம் திகதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

குறித்த அறிக்கைக்கே தற்போது சிறிலங்கா அரசு தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றது.

தொடர்புடைய செய்தி :- ஜஸ்டின் ட்ரூடோவின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அறிக்கை – இலங்கை அரசு கண்டனம்

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply