வெற்றிலைக்கேணி, சுண்டிக்குளம், சாலை மற்றும் நாகர் கோவில் ஆகிய கடற்பரப்புகளில் நேற்று இரவு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேரை விசேட சுற்றிவளைப்பில் இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர்கள் அனுமதியற்ற மீன்பிடி சாதனங்களையும் சட்டவிரோத மீன்பிடிக்காகப் பயன்படுத்தப்பட்ட 5 டிங்கிப் படகுகளையும் வைத்திருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சுண்டிக்குளத்திற்கு அருகில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 நபர்களைக் கைது செய்ததுடன் அவர்கள் பயன்படுத்திய சட்டவிரோத மீன்பிடி சாதனங்களையும், படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், நாகர் கோவில் கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடல் வெள்ளரிகளைப் பறித்த 3 நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் 110 கடல் வெள்ளரிகளுடன் டிங்கிப் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் முள்ளியான், புதுமாத்தளன், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, மன்னார் மற்றும் மாமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், 18 முதல் 52 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் 9 பேரும், 5 டிங்கிப் படகுகளும், அனுமதியற்ற மீன்பிடி சாதனங்களும், கடல் வெள்ளரிகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.
T02