யாழ். பல்கலையில் மோதலில் ஈடுபட்ட 31 மாணவர்களுக்குத் தடை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து, 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேரும், மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேரும், அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து, குறித்த மாணவர்களுக்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விதிமுறைகளுக்கமைவாக, பல்கலைக்கழகக் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், விடுதி உட்பட பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதியினுள் நுழைவதற்கும், மறு அறிவித்தல் வரை, தடை விதிக்கப்பட்டுள்ளதாக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்களின் “மாகோஸ்” வார நிகழ்வுகள் கடந்த 31 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பமாகியிருந்தது.

இந்த நிலையிலேயே, கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வின் போது ஏற்பட்ட வாய்த் தகராறு கைகலப்பாக மாறி, மோதலில் முடிந்தது.

இந்த மோதலில் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த சம்பவம் தொடர்பிலான பூர்வாங்க விசாரணைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தன.

விசாரணைகளின் முடிவில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும், மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேருக்குமே விசாரணைகள் முடிவுறும் வரையில், உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், மோதல் சம்பவத்தையாடுத்து முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்களின் “மாகோஸ்” வார நிகழ்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply