ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சமல் ரஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்துமாறு தான் பரிந்துரைத்ததாக வண.பெங்கமுவா நாலக தேரர் தெரிவித்துள்ளார்.
எனினும் அப்படி நடக்காத காரணத்தாலும், பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய நாட்டுக்கு ஆற்றிய சேவையை நினைத்தும் அவரை அதிபராக்குவதற்கு தீமானித்து கடுமையாக உழைத்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்கணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“கோட்டாபய ராஜபக்ஷ மீது நாம் கொண்டிருந்த நம்பிக்கையை அவர் முற்றாக அழித்துவிட்டார்.
இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையை சிதைத்ததற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும்.
அதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும். இன்றும் சிலர் எங்களை அழைத்து குற்றம் சாட்டுகிறார்கள்.
கோட்டாபய ராஜபக்சவிற்கு பதிலாக சமல் ராஜபக்ச நாட்டின் அதிபராக இருந்திருந்தால் நாடு இந்த நிலைமைக்கு வந்திருக்காது.
இந்த சமூகத்தில் ராஜபக்சாக்கள் முன்னேற நிறைய இடங்கள் உள்ளன. ஆனால் இந்த நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளையும் வெளியே எடுத்து ராஜபக்ஷக்களை அழிக்கும் முயற்சியே தற்போது நடைபெறுகின்றது.
ராஜபக்ஷக்கள் 100 வீதம் சரியானவர்கள் என்று நாங்கள் கூறவில்லை. ஈஸ்டர் தாக்குதலும் ராஜபக்சாக்களின் செயல் என்று சிலர் கூற முயற்சிப்பதைப் பார்த்தோம். இதுபோன்ற செயல்களை செய்வது கோழைத்தனம் என்று நினைக்கிறேன்.
ராஜபக்ஷக்களை வெள்ளையடிக்க நாங்கள் தயாராக இல்லை. அவர்கள் தவறு செய்தால் அதனை தவறு என்று தெரிவிப்போம்.
ஆனால் இந்த நாட்டில் நடக்கும் அனைத்து தவறுகளுக்கும் ராஜபக்ஷக்கள் மீது பழி போட வேண்டும் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.