இனியும் ஏமாற முடியாது – தீர்க்கமான முடிவிற்குத் தயார்!

இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் அற்ற பேச்சுவார்த்தைகளால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அரசியல் தீர்வு விடயத்தில் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என தமிழத்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், தீர்க்கமான ஒரு முடிவை எடுக்கும் நிர்ப்பந்தத்திற்குள் நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம் என  அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  இடம்பெற்ற இந்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“நாங்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகிறோம். இனியும் ஏமாந்துபோக தயாராக இல்லை, பாதிக்கப்பட்ட இனம் என்ற ரீதியில் எமக்கு பிரச்சினைகள் பல உள்ளன.

இதற்கு தீர்வு காணப்படவேண்டும். நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சந்திப்புகளும் ஏமாற்றத்தையே தந்துள்ளன.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஊகங்களை நம்பி தொடர்ந்து பேசுகின்ற போது, ஏமாற்றமே மிஞ்சுவதால் தீர்க்கமான முடிவு எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது தமிழ் தரப்பினால் காணி விடுவிப்பு அரசியல் கைதிகள் விடுவிப்பு திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் சமகால பிரச்சினைகள் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கலையரசன், சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறீதரன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனராதிராஜா, ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply