இலங்கையில் அரச அலுவலக கட்டடங்களுக்காக பணம் அதிகளவில் வீணடிக்கப்படுவதாக நாடாளுமன்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து அரச நிறுவனங்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டிடங்களில் மாத்திரமே செயற்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“அனைத்து அரச நிறுவனங்களும் வரி செலுத்துவோரின் பணத்தினாலேயே பராமரிக்கப்படுகின்றன.
இவ்வாறான நிலையில், அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்திற்கு மாதாந்தம் 13 இலட்சம், ரூபா செலவிடப்படுகின்றது.
தேசிய லொத்தர் சபைக்கு மாதம் 65 இலட்சம் ரூபாவும், கொள்ளுப்பிட்டியில் உள்ள மின்சார அமைச்சுக்கு மாதம் 20 இலட்சம் ரூபா, மின்சார சபை நகர அலுவலகத்திற்கு மாதம் 20 இலட்சம் ரூபா, மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கட்டிடத்திற்கு மாதாந்தம் 20 இலட்சம் ரூபா என பணம் வீணடிக்கப்படுகின்றது” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.