அரசியல்வாதிகள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் சுங்க அதிகாரிகள் போன்ற செல்வாக்கு மிக்கவர்கள் பேருந்து உரிமையாளர்கள் மத்தியில் இருப்பதால் தனியார் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவது சவாலாகவே உள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன குற்றம்சாட்டியுள்ளார்.
இதனடிப்படையில், முறைகேடாக வாகனம் ஓட்டுதல், பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்காமை, அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு தற்காலிக நிறுத்தங்கள், நேர அட்டவணையை கடைபிடிக்காமை ஆகியவை பயணிகள் போக்குவரத்து சேவையில் 50 சதவீத பங்குகளை வகிக்கும் தனியார் பேருந்து நடத்துனர்கள் மீதான முக்கிய குற்றச்சாட்டுகளாகும்.
பேருந்து சேவையின் தரத்தை மேம்படுத்தும் அதே வேளையில், தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் பேருந்து சேவையை ஒழுங்குபடுத்த தவறியமை குறித்த கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்து, பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன,
நாடு முழுவதிலும் உள்ள தனியார் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவது எப்போதுமே சவாலானதாகவே இருந்ததாக தெரிவித்தார்.
குறிப்பிட்ட சில வீதிகளில் பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பேருந்து நடத்துனர்களில் அரசியல்வாதிகள், உள்நாட்டு இறைவரி அதிகாரிகள், சுங்க அதிகாரிகள் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வழித்தட அனுமதி அல்லது உரிமம் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சிலர் தற்காலிக வழித்தட அனுமதி மூலம் தங்கள் பேருந்துகளை சாலைகளில் இயக்குகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க குத்தகைக்கு கோர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்துகள், சாதாரண, அரை சொகுசு மற்றும் சொகுசு சேவை என மூன்று வகைகளில் இயங்கி வந்தன.
இருப்பினும், அரசாங்கம் சமீபத்தில் அரை சொகுசு சேவையை இரத்து செய்தமையும் குறிப்பிடத்தக்கது.