ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அதிகரித்த வீதி விபத்துகள்

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துகளால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும் வீதிகளில் வாகனங்களை செலுத்தும்போது போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறே இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் நடந்த விபத்துக்களில் மோட்டார் வாகன விபத்துகளே அதிகளவில் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 8,202 விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் 667 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுவதோடு 2,160 பாரிய விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் 3,201 சிறு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதோடு விபத்துக்களில் உயிரிழந்த 709 பேரில் 220 பேர் மோட்டார் வாகனத்தை செலுத்தியவர்கள் எனவும் 102 பேர் மோட்டார் வாகனத்தின் பின்னால் இருந்து பயணித்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் 179 பாதசாரிகள் வீதி விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். இதன்படி வீதியில் நிகழும் விபத்துகளில் பெரும்பாலானவை மோட்டார் வாகனங்களாலும் முச்சக்கரவண்டிகளாலும் இடம்பெற்றுள்ளன என தெரிவித்த அவர் குறித்த வாகனங்களை செலுத்துபவர்கள் வீதிகளில் பயணிக்கும்போது போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும் என தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply