ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் யார்? விரைவில் அம்பலமாகும்!

ஈஸ்டர் தாக்குதலை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஊடாகவே, எதிர்காலத்தில் தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழாவின் விசேட ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பணத்தை வீசி எறிந்து கொள்கைகளை காட்டி சுவர்க்கத்திற்கு செல்ல முடியாது என தெரிவித்தார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த இடத்திலும் மேலும் பல இடங்களிலும் குண்டுதாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஆனாலும் இந்த அரசாங்கம், இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் யார்? எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான முறையான விசாரணைகளை நடத்தினார்களா? அதன் உண்மை தன்மை குறித்து ஆராய்தார்களா? சட்டம் எங்கே? நீதி எங்கே? இன்று வரையில் எதற்கும் பதில் இல்லை. எங்களை ஏமாற்றலாம் என்று இவர்கள் நினைக்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் நாங்கள் ஏமாறுவதில்லை. நீங்கள் தான் ஒருநாளில் ஏமாறுவீர்கள். தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் உயிர்களை காவுகொள்ள அனுமதி வழங்கியவர்கள், தைரியத்தை வழங்கியவர்கள், ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இன்று உயர்ந்த பதவிகளில் இருக்கின்றார்கள்.

ஆனால் அதற்கான பலன் உங்களைத் தேடி வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

கூடிய விரைவில் நீங்களே உங்களை காட்டிக்கொடுத்து உங்களுக்கூடாகவே அந்த உண்மைகள் அனைத்தும் வெளிவரும்.

இந்த தேவாலயத்தில் மிகப்பெரிய உற்சவம் ஒன்றை நடத்துவதற்கான அந்த நாள் வரும் வரை காத்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் உட்பட கொழும்பின் பிரபல விடுதிகள், நீர்கொழும்பு தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு தேவாலயம் ஆகியவற்றில் ஒரேநேரத்தில் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததோடு, 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply