முல்லேரியாவில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட புல் வெட்டும் தொழிலாளியான சந்தேகநபருக்கு, எதிர்வரும் ஜுன் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
52 வயதான அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கடந்த ஜூன் 08 ஆம் திகதி இரவு முல்லேரியா, ஹல்பராவ பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் ஐந்து வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.
உடைந்த கண்ணாடி போத்தலின் துண்டுகளால் ஏற்பட்ட காயத்தால் அதிகப்படியான இரத்தப்போக்கு காரணமாக குழந்தை இறந்ததாக முதலில் நம்பப்பட்டது.
இருப்பினும், சிறுவன் மீட்கப்பட்ட இடத்திலிருந்து 4 அடி தொலைவிலேயே கண்ணாடித்துண்டுகள் காணப்பட்டுள்ளன.
சிறுவன் மீட்கப்பட்ட இடத்திற்கும் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்ட இடத்திற்கும் இடையில் இரத்தக் கறைகள் எதுவும் காணப்படாததால் சந்தேகம் எழுந்தது.
பின்னர், அன்றைய தினம் கட்டுமானம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பகுதிக்கு அருகாமையில் இருந்த புல் வெட்டும் தொழிலாளி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது, ஜொனாதன் மார்க் பொன்சேகா என்ற 5 வயதுச் சிறுவனை, புல்வெட்டும் இயந்திரத்தின் கத்திகள் தற்செயலாகத் தாக்கியதாலே சிறுவன் இறந்தான் என உண்மையை ஒப்புக்கொண்டார்.
அப்போது, சந்தேகநபர் பயத்தில் இருந்ததாகக் கூறியதோடு, சிறுவன் கண்ணாடித் துண்டுகளால் ஏற்பட்ட வெட்டுக் காயங்களால் இறந்ததைப் போல தோற்றமளிப்பதற்காக, அருகில் உடைந்த கண்ணாடி போத்தலின் துண்டுகளை வைத்ததாக ஒப்புக்கொண்டார்.
கணவனைப் பிரிந்து வாழும் தாயார் வேலைக்குச் சென்ற நிலையில், பகல் நேரத்தில் குழந்தையை தாத்தா பாட்டி கவனித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சம்பவத்தன்று தாத்தா, பாதுகாப்பு உத்தியோகத்தராக பணிபுரியும் புல் வெட்டும் தொழிலாளியிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு வெளியே சென்றுள்ளார்.
குழந்தைக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கத் தவறியதற்காக தாத்தாவும் பின்னர் கைது செய்யப்பட்டார்.
இருப்பினும், அவர் இரண்டு சரீரப் பிணையிலும், 300,000 ரூபாய்கள் அபராதத்திலும் விடுவிக்கப்பட்டு, இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, இன்று புல்வெட்டும் தொழிலாளியான குறித்த சந்தேக நபரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவருக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.