இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோற்றாலும் வெல்ல போவது சஜித் பிரேமதாசவோ, மகிந்த ராஜபக்சவோ அல்ல எனவும் தேசிய மக்கள் சக்தியே வெற்றி பெறும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் இப்பலோகம பிரதேசத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“தனக்கு சாதகமான நிலைமை காணப்படவில்லை என்பதாலேயே ரணில் விக்ரமசிங்க தேர்தலை ஒத்திவைத்து வருகின்றார்.
இதேவேளை, கடந்த காலங்களில் தோல்வியடைவோம் என்று தெரிந்தும் ரணில் விக்ரமசிங்க தேர்தலை நடத்தியுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் ராஜபக்சவினர் மற்றும் விக்ரமசிங்கவினரின் மிகப் பெரிய மேலாதிக்கம் தோல்வியடையும்.
இதன் பின்னர் அவர்கள் மக்களுக்கு பொறுப்புக்கூற நேரிடும். இதன் காரணமாகவே தேர்தலை ஒத்திவைத்து வருகின்றனர்.
உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல், ரணில் விக்ரமசிங்கவினால், உள்ளூராட்சி சபைகளை நிர்வாகம் செய்ய முடியும்.
எனினும் ஜனாதிபதி தேர்தலையோ, பொதுத் தேர்தலையோ நடத்தாமால் தவிர்க்க முடியாது.
அடுத்தாண்டு நவம்பர் மாதம் கட்டாயம் ஜனாதிபதி தேர்தலை நடத்தியாக வேண்டும். இன்னும் 14 அல்லது 15 மாதங்களுக்குள் அந்த தேர்தலை நடத்த வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க தேர்தலை ஒத்திவைத்து தோல்வியில் இருந்து தப்பிக்க முடியாது.
2019 ஆம் ஆண்டு ராஜபக்ச அணியினர், நாட்டை காப்பாற்ற தற்போது இருக்கும் ஒரே நபர் கோட்டாபய ராஜபக்ச எனக் கூறினர்.
69 லட்சம் மக்கள் வாக்களித்தனர். ஆனால், கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் தனது இயலாமையை காட்டினார்.
மக்கள் வீதியில் இறங்கி அவரை விரட்டியத்தனர். ராஜபக்சவினர் அந்த பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை கொண்டு வந்தனர்.
போத்துகீசர்கள், ஒலாந்தர்கள் மற்றும் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற ராஜபக்சவினர் கிராமங்களுக்கு சென்று வாக்கு கேட்கவில்லை.
ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து நாட்டை காப்பாற்றவே வாக்கு கேட்டனர்.
ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்தால், நாட்டை விற்பனை செய்வார், நாட்டை பிரிப்பார், நாட்டை காட்டிக்கொடுப்பார் எனக்கூறி ஆட்சிக்கு வந்த கோட்டாபய விலகியதும், நாட்டை அழிப்பார் எனக்கூறிய ரணில் விக்ரமசிங்கவையே ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் ரணில் திருடன் என சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் தற்போது ரணிலை ஐயா என அழைத்து அவரை ஜனாதிபதி பதவியில் அமர்த்தியுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்” எனவும் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.