மட்டக்களப்பில் மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பிரதேச மக்களினாலேயே கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், போரதீவுப்பற்று பிரதேச கலாசார மண்டபத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மக்கள் தமது பூர்வீக எல்லைகளை மாற்றியமைக்க வேண்டாம் என கூறியும் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சேதனப்பசளை உற்பத்தி நிலையத்தினை இடமாற்ற வலியுறுத்தியும் அரச காணிகளை அபகரிப்பதை தடுத்துநிறுத்துமாறு கோரியும் சட்ட விரோத மண் மாபியாக்களுக்கு அனுமதி வழங்கவேண்டாம் என வலியுறுத்தியும் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அதிகாரிகளே கிராம மக்களை முட்டாளாக்க நினைக்காதே, நியாயமான கோரிக்கைக்கு மதிப்பளி, பூர்வீக எல்லைகளை மாற்றியமைக்க வேண்டாம், அத்திப்பட்டி அழிந்ததைப் போல் திக்கோடை அழிகின்றது, குப்பைபோட இடம் வழங்க வேண்டாம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்ப்பாட்ட இடத்திற்கு சென்ற இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.
இதன்போது பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் இதற்கான தீர்வினை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்டு தமது கருத்துகளை முன்வைத்தனர்.
இது தொடர்பில் ஆராய்ந்த அபிவிருத்துக்குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், குறித்த பகுதியில் உள்ள சேதனப்பசளை உற்பத்தி நிலையத்தினை வேறு இடத்திற்கு மாற்றவும் எல்லை மீள் நிர்ணய செயற்பாட்டு மற்றும் காணி தொடர்பான புனரமைப்பு பணிகளை நிறுத்தவும் உத்தரவிட்டதுடன் சட்ட விரோதமான முறையில் காணி அபகரிப்பு செய்யப்படுவது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளனர்.