விடுதலைப்புலிகளை மீள உருவாக்குவதற்கு முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 10 இலங்கையர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
இவர்கள் கடந்த வருடம் திருச்சி விசேட முகாமில் வைத்து கைதுசெய்யப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்செயல்கள் மூலம் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் எனவும் இந்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கை இந்தியாவில் விடுதலைப்புலிகளிற்கு புத்துயுர் அளிப்பதற்காக பணம், ஆயுதங்களை சேகரித்தல் பதுக்கி வைத்தல் போன்றவற்றிற்காக இவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டனர்.
இலங்கையை சேர்ந்த குணா என அழைக்கப்படும் குணசேகரன், பூக்குட்டி கண்ணா என அழைக்கப்படும் புஸ்பராஜாவும் பாக்கிஸ்தானை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் ஹாஜிசலீம் என்பவருடன் இணைந்தே போதைப்பொருள் வர்த்தகத்தில் செயற்பட்டனர் எனவும் இந்திய புலனாய்வு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் விடுதலைப்புலிகளிற்கு புத்துயுர் கொடுப்பதற்கான சதி முயற்சிகள் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளன எனவும், இந்தியாவில் முன்கூட்டியே செயற்படுத்தப்பட்ட சிம்கார்ட்களுடன் பல கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன எனவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதோடு, பெருமளவு பணமும் தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டன என இந்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலமே பணமும் தங்கமும் கிடைத்துள்ளது இந்த பணத்தை இவர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பரிமாறியுள்ளனர் எனவும் இந்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.