இலங்கைளில், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடல் உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என இலங்கை தொடர்பான இணைத்தலைமை நாடுகளின் குழு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, மொண்டிநீக்ரோ, மலாவி மற்றும் வடக்கு மஸிடோனியா முதலான இலங்கை தொடர்பான இணைத்தலைமை நாடுகள் குழு, நேற்றைய தினம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே, இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை வெளியாகியுள்ளது.
இலங்கையில், பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளமை குறித்தும் ஜெனிவாவில் இயங்கும், இலங்கை தொடர்பான இணைத்தலைமை நாடுகள் குழு கரிசனை வெளியிட்டுள்ளது.
அதேவேளை, காணிகளை மீளக் கையளித்தல், நீண்டகால தடுப்பு மற்றும் ஊழல் தொடர்பான நீண்டகால கரிசனைகளை நிவர்த்தி செய்வதற்கான இலங்கையின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளுக்கு அந்தக் குழு வரவேற்பு தெரிவித்துள்ளது.
அதேநேரம், பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவதற்கான தொடர்ச்சியான முயற்சியை தாங்கள் ஒப்புக்கொள்கின்ற அதேவேளை, அந்த மறுசீரமைப்புகள், இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளுடன் இணங்கிச் செல்வதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.