நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க ராஜபக்சர்கள் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்கள், ராஜபக்ஷர்களால் மாத்திரமே இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடியும் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
அத்துடன், எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் மக்கள் ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயம் தோற்றுவிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
கலாவெவபகுதியில் நேற்று சனிக்கிழமை (24) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்ப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். கட்சியின் உள்ளக விவகாரங்களில் ஜனாதிபதி தலையிடுவதில்லை, நாங்களும் ஐக்கிய தேசியக் கட்சிகளின் அரசியல் செயற்பாடுகளில் தலையிடுவதுமில்லை.
சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.
பொருளாதாரமா அல்லது மக்களின் சுகாதாரமா என்ற கேள்வி எழுந்த போது பொதுஜன பெரமுன அரசாங்கம் நாட்டு மக்களின் உயிரை பாதுகாக்க முன்னுரிமை வழங்கியது.
கொவிட் பெருந்தொற்று தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை பெரும்பாலானோர் மறந்து விட்டனர்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார், யார் என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடும் கருத்து அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடே தவிர கட்சியின் நிலைப்பாடல்ல ” எனக் குறிப்பிட்டார்.