மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்பவர்கள் யார்? அவ்வாறானவர்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு சட்டவிரோத செயற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களுடைய காணிகளை சிங்களவர்கள் அபகரித்ததால் தான் அவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து யுத்தம் புரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே தமிழர் பகுதியில் இவ்வாறு சட்ட விரோத மண் அகழ்வு தற்போது இடம்பெறுவதாகவும், அதனை உரிய அமைச்சர்கள் கவனத்தில் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் உனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மகாவலி மற்றும் மேச்சல்தரை தொடர்பான விசேட கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அரசியல் நிர்வாக அதிகாரிகள் கலந்துரையாடி எதிர்காலத் திட்டம் என்ன என்பது தொடர்பிலும், சட்ட விரோத மண் அகழ்வினை எவ்வாறு தடுக்கலாம் என்பது தொடர்பிலும் யோசிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சட்ட விரோதமாக மகாவலி திட்ட பிரதேசத்தில் மண் அகழப்படுவது தொடர்பில் உரிய அமைச்சரிடம் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சட்ட விரோதமாக மண் அகழும் மாபியா குழுக்களுக்கு உடந்தையாக பிள்ளையானும் செயற்படுவதாகவே பிரதேச மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.