மீனவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று ஓட்டமாவடி மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காவத்தமுனையில் இன்று பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் காவத்தமுனையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான முத்துவான் அன்சார் எனும் 54 வயதுடைய குடும்பஸ்தர் என்பது தெரியவந்துள்ளது.
ஓட்டமாவடி ஆற்றிலுள்ள ஆமை ஓடை குடாவில் மீன் பிடிக்கச் சென்ற குறித்த நபர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தவேளை குறித்த நபர் இறால் பண்ணைக்கு அருகாமையிலுள்ள நீரோடை ஒன்றில் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கவத்தமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் இறால் பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார வேலி இணைப்பில் அகப்பட்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த இடத்தில் இதற்கு முன்னர் மின்சாரம் தாக்கி யானை ஒன்றும் 3 கால் நடைகளும் உயிரிழந்துள்ளதாகவும் கவலை தெரிவித்த மக்கள், பொதுமக்கள் பாவிக்கும் பொது இடங்களில் இவ்வாறான மின்சார இணைப்புகளை வழங்குவதை தடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.