கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது, யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்கர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சிறுவர், பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 6 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் கடந்த மே மாத இறுதி வரை பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகளும், சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 53 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அச்சுறுத்தல், துன்புறுத்துதல், காயப்படுத்துதல், மிரட்டுதல், சித்திரவதைக்கு உட்படுத்துதல், உள ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்தல், பாலியல் ரீதியான தொல்லை போன்ற வன்முறை சம்பவங்கள் வீடுகள், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பிலே 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் மீது, விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பலர் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் முதல் அரையாண்டு பகுதிக்குள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்த நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து யாழ்ப்பாணப் பொலிஸாரால் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் இதர விடயங்களை உறுதிப்படுத்தும் வேலை திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.