யாழ். மாவட்டத்தில் 1843 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இன்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், வடக்கு மாகாணத்தில் கடந்த ஆறு மாதங்களில் 1843 பேர் டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இது வரையில் தென்பகுதியில் இருந்து வந்த ஒருவர் மாத்திரம் டெங்கு தாக்கத்தினால் இறப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், யாழ். மாவட்டத்தில் 1491 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 65 பேரும், மன்னார் மாவட்டத்தில் 77 பேரும், வவுனியா மாவட்டத்தில் 106 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 104 பேருமாக மொத்தமாக 1843 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகமாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர், கரவெட்டி ஆகிய பிரதேசங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுதவிர, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் டெங்குத் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது.
இதனையடுத்து, டெங்கு தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும், பொதுமக்கள் தமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருந்து பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.