நாடாளுமன்ற குழு கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பங்கேற்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அனுமதி வழங்கப்படாவிட்டால் தாம் தனியான குழு அமைத்து அரச அதிகாரிகளை அழைத்து கேள்வி எழுப்பப் போவதாக சஜித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்ற குழு கூட்டங்களில் பங்கேற்கவோ கேள்விகளை எழுப்புவோ முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு கடன் சீரமைப்பு குறித்து அரச அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பும் நோக்கில் தாம் இந்த கூட்டத்தில் பங்கேற்றதாகவும் குறிப்பாக ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பனவற்றுக்கு கடன் மறுசீரமைப்பில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து அறிந்து கொள்ளவே தாம் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்பட வேண்டாம் என அவர் சபாநாயகரிடம் கோரியுள்ளார்.
எனவே அரசாங்க அதிகாரிகள் தமது கேள்விக்கு பதில் அளிக்க தவறினால் அது தனது சிறப்புரிமையை மீறும் வகையிலானது எனவும் அவ்வாறு சிறப்புரிமை மீறப்பட்டால் அதற்கு சபாநாயகரே பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, அரச அதிகாரிகளை அழைத்து கேள்வி எழுப்ப அனுமதி வழங்குவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு குறித்து, நாடாளுமன்றின் பொது நிதி குழுவில் நடைபெற்ற கூட்டத்தில் சஜித் பிரேமதாச பங்கேற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.