பிணைமுறி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டவர் இன்று நாட்டின் ஜனாதிபதி! சபையில் அனுர முழக்கம்

மத்திய வங்கியில் பிணைமுறி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தான் இன்று ஜனாதிபதியாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொருளாதாரக் குற்றவாளிகள் எமது நாட்டில் மிகவும் சுதந்திரமாக இருக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எமது நாட்டில் சட்டம் பலமாகத்தான் உள்ளது. அதானால்தான் தேங்காய் திருடியவரும், இலஞ்சம் வாங்கிய கிராமசேவகரும், பொலிஸாரும்கூட சிறைக்குச் செல்கிறார்கள்.

ஆனால், இந்தச் சட்டத்தில் பாரிய குற்றங்களை இழைத்தவர்கள் சிக்குவதில்லை. அரசியல் பலத்தால் இதிலிருந்து இவர்கள் இலகுவாக தப்பித்துக் கொள்கிறார்கள்.

இந்த குழியிலிருந்து வெளியே வர, ஸ்தீரமான மற்றும் நேர்மையான அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

மத்திய வங்கியில் பிணைமுறி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தான் இன்று ஜனாதிபதியாக உள்ளார். நாட்டுக்குள் சட்டவிரோதமாக தங்கத்தை கடத்த முயன்றவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இவ்வாறு எமது நாட்டின் அரசியல் கலாசாரத்தில்தான் பிரச்சினைக் காணப்படுகிறதே ஒழிய, சட்டத்தில் அல்ல.

குற்றவாளிகளை பாதுகாக்கும், குற்றவாளிகளுக்கு சுதந்திரம் அளிக்கும், குற்றவாளிகள் சட்டத்தை இயற்றும் ஒரு நாடாளுமன்ற சம்பிரதாயம் முதலில் மாற்றமடைய வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply