முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தமிழீழ விடுதலைப்புலி அமைப்பின் முன்னாள் பெண் போராளிகளுடையதாக இருக்கலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
தனது அவதானிப்பின் படி உரிய சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் இந்த மனிதப் புதைகுழி அகழ்வுகள் நிகழவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.
கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தின் மத்தி கொக்குத்தொடுவாய் பகுதியில் நிலத்தடி குடி தண்ணீர்க் குழாய்களைப் பொருத்துவதத்திற்காக வீதியோரத்தில் குழி தோண்டப்பட்ட நிலையில் இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் குறித்த பிரதேசத்தை அவதானித்தாகவும் தெரிவித்தார்.
அதன்படி, முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் நேற்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, முல்லைத்தீவு நீதவான், பொலிஸார் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த அகழ்வு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்,
அகழ்வின் போது அந்ததந்த நேரத்தில் கிடைக்கும் பொருட்களை தடையப்பொருளாக வைக்கப்படுவதாகவும் இது சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் நிகழவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால் பல சான்றுகள் அழியும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பல பெண் போராளிகளினுடைய சீருடைகள் அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு ஆணொருவரின் எச்சமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
நீதவான் மேற்பார்வையின் கீழ் இந்த அகழ்வு நடைபெற்றாலும் கூட சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் இடம்பெற்றிருந்தால் சிறந்ததாக இருந்திருக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.