மக்கள் விடுதலை முன்னணி நாட்டின் எதிர்காலம் குறித்து தீர்மானங்களை எடுக்கும் மட்டத்தில் இல்லை என காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்வரிசை செயற்பாட்டாளர்களில் ஒருவரான மருத்துவர் பெத்தும் கர்ணர் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியிடம் தெளிவான நிலைப்பாடு இருக்கவில்லை.
போராட்டம் ஆரம்பித்த காலத்தில் போராட்டத்துடன் தமக்கு தொடர்பில்லை என கூறிய மக்கள் விடுதலை முன்னணி இறுதியில் அது தமது செயற்பாடுகள் எனக்கூறியது.
போராட்டம் ஆரம்பிக்கும் போது அது குறித்து எதனையும் புரிந்திருக்காத ஜே.வி.பியினர் போராட்டத்தில் நாங்கள் இல்லை என செய்தியாளர் சந்திப்பை நடத்தி கூறியதுடன் மக்கள் போராட்டத்திற்கு இறப்பர் முத்திரை குத்த போவதில்லை என்றனர்.
கையை உடைத்துக்கொண்டு உடம்பை தற்காதுக்கொண்டனர். பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் மக்கள் வீதிகளில் இறங்கும் போது, அது பற்றி எவ்வித தெளிவும் ஜே.வி.பிக்கு இருக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கும் கோட்டாபய ராஜபக்சவை விரட்ட முடியாது என்று ஜே.வி.பியினர் நினைத்தனர்.
இதனால், கூட்டங்களை நடத்துவதே ஒரே செயற்பாடு என அவர்கள் நம்பினர். எனினும் போராட்டம் வெற்றியை நோக்கி செல்லும் போது, அதற்குள் புகுந்துக்கொள்ள ஜே.வி.பியினர் முயற்சித்தனர். இறுதியில் போராட்டத்தை தமது பெயரில் எழுதிக்கொள்ள முயற்சித்தனர்.
எனினும் அகிம்சை வழியை உருவாக்கி, அமைதியான அரசியல் தீர்வுக்கான இலக்கை நோக்கி செல்ல மக்களுக்கு வழிக்காட்ட அவர்களுக்கு புரியவில்லை.
58 ஆண்டுகள் பழமையான அரசியல் கட்சியின் இயலுமை இது மாத்திரமே எனவும் பெத்தும் கர்ணர் குறிப்பிட்டுள்ளார்.