வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றினால் மேலும் பல புதைகுழிகளை கண்டுபிடிக்க முடியும் என காணாமல் போன தனது மகனைத் தேடி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மன்னாரில் உள்ள தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இப்பொழுது ஒவ்வொரு புதைகுழிகளாக கிளம்பிக் கொண்டிருக்கின்றன. அதுபோல் முல்லைத்தீவில் ஒரு புதைகுழி கிளம்பியுள்ளது.
இராணுவ முகாம்களை அகற்றினால் இன்னும் பல புதைகுழிகள் வெளிவரும். ஏனென்றால் இராணுவ முகாம்கள் இருக்கின்ற இடங்களில் புதைகுழிகள் இருக்கும்.
இராணுவத்தினர் பலவந்தமாகப் பிடித்துக்கொண்டு சென்ற பிள்ளைகளை அவர்களே அடித்துக் கொன்று, அந்தந்த இடத்தில் புதைத்திருப்பார்கள்.
இராணுவ முகாம்களை அகற்றாமை, சிங்கள மக்களை குடியேற்றுவதற்கும், பௌத்த விகாரைகளை அமைப்பதற்கும் காரணம் புதைகுழிகளை மூடி மறைத்து தங்களை பாதுகாப்பதற்காகவே எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எங்களுடைய தமிழ் பிரதேசத்தில் பௌத்த விகாரைகள் ஒன்றும் அவசியமில்லை.
பௌத்தர்கள் யாரும் இங்கு இல்லை. தமிழ் பிரதேசத்தில் அவர்களை ஏன் கொண்டுவந்து வைக்க வேண்டும்.
சிங்கள இராணுவத்தை வெளியேற்றுங்கள் என்றுதான் நாம் கோருகின்றோம். அவர்களை வெளியேற்றினால் தானே எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம் கடந்த ஜூலை 6 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், அரசாங்கம் யாரையும் மகிழ்விப்பதற்காக இராணுவத் தளங்களை ஒருபோதும் அகற்றாது.
ஆனால் உரிய விசாரணைக்கு பின்னர் இறுதி தீர்மானம் மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனக் குறிப்பிட்டிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.