இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்காக தமிழீழம் அமைய வேண்டும் என நான்காவது சர்வதேச மாநாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்திய எதிரி நாடுகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதாகவும் குறித்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ள நிலையில், அருகில் உள்ள தொன்ட்ரா விரிகுடா கடற்பகுதியில் தனது அறிவியல் விண்வெளி தகவல் ஆராய்ச்சி மையம் மூலம் ராடர் தளம் ஒன்றையும் அமைக்கின்றது என்பதோடு, தலைமன்னார் பகுதியில் இராணுவ தளவாடங்களை அமைத்து இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவே இலங்கையில் தமிழீழம் அமைந்தால் சீனாவால், இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறையும் என்பதை வலியுறுத்தி தமிழ் ஈழ வரலாறு பற்றிய புரிதல் மற்றும் இந்து சமுத்திர பாதுகாப்பில் ஈழத் தமிழர்களின் முக்கியத்துவம் என்பன குறித்து நான்காவது சர்வதேச மாநாட்டில் பேசப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை, இந்திய கடலோர பொலிஸ் படைகளின் ரோந்து கப்பல்கள், மற்றும் படகுகளின் இயக்கத்தை சீன ராடர் தளத்தால் துல்லியமாக கண்காணிக்க முடியும் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளதால் இலங்கையில் தமிழீழம் அமைக்க இந்தியா துணை போக வேண்டும் என இதன் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா தற்போதுள்ள தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் தற்போது மதவாதம் அதிகரித்து வருவதால் அழிவை சந்தித்து வருகின்றது.
அதுமட்டுமன்றி, இலங்கையில் சீனா, துறைமுகம் கட்டி உள்ளது. ஆனால் இலங்கை, இந்திய தேசத்துடன் தான், தாங்கள் துணை நிற்போம் என கூறுவதையும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிகளவான நல திட்ட உதவிகளை இலங்கைக்கு செய்து உள்ளார்.
இலங்கையும் இந்தியாவும் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரத்தை பெறப் போராடிய காலத்தின் இறுதிக் காலகட்டங்களில் இந்தியாவுடன் இலங்கை நெருங்கிய தொடர்பை பேணுவதாக அன்றைய பிரதமர் நேருவிற்கு கடிதம் எழுதிவிட்டு, 1947 டிசம்பரில் பிரித்தானிய அரசுடன் இணைந்து இந்தியாவிற்கு எதிரான பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டுக்கொண்டது.
மேலும் இலங்கை 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 திகதி சுதந்திரத்தை பெற்றுக்கொண்டது என்ற வரலாற்று சம்பவத்தை சுட்டிக்காட்டி இலங்கையின் இராஜதந்திரம் பற்றி நாம் ஆழமாக புரிந்திட வேண்டும் என்றும் குறித்த மாநாட்டில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில் திருமண மண்டபத்தில் ஸ்ரீ லட்சுமி நாராயண பீடம் கல்கி மகான் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் தலைமையில் இந்த மாநாடு இடம்பெற்றது.
குறித்த இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாததற்கு மிக வருத்தத்தை தெரிவித்த ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், மதுரை ஆதீனத்திலிருந்து தொலைபேசி வாயிலாக நிகழ்வை தொடக்கி வைத்து நிகழ்வு சிறப்புற நிகழ வாழ்த்துரை வழங்கினார்.
குறித்த நான்காவது சர்வதேச மாநாட்டில் கல்கி மகான் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள், பி .அன்னலட்சுமி ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில் ,ஓம் மகாலட்சுமி ஜன சேவா டிரஸ்ட்ன் உறுப்பினர்கள், சிறுதுளி அமைப்பின் இந்திய தேசிய ஒருங்கிணைப்பாளர் ராகுல் ரமேஷ், SWTT நிறுவனத்தின் தேசிய பொது செயலாளர் சப்தகிரி ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.